பாஜக மாநில நிர்வாகியை மிரட்டிய திமுக எம்.பி.!
பாஜக மாநில நிர்வாகியை
மிரட்டிய திமுக எம்.பி.!
சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்
தஞ்சை ரயில் நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட திமுக எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவ்விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தை மிரட்டும் தொணியில் பேசினார்.
அவரது அடாவடிப் பேச்சைக் கண்டித்து பாஜகவினர் அவ் விழாவில் இருந்து கோஷமிட்டவாறு வெளியேறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் நிலைய திட்ட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரூ.23 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (மக்களவை), கல்யாணசுந்தரம் (மாநிலங்களவை), பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கநல்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் பேசுகையில் ‘ஒன்றியப் பிரதமர்’ எனக் குறிப்பிட்டதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இக் கூட்டத்தில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை பாஜக நிர்வாகிகள் சமாதானம் செய்து உட்கார வைத்தனர்.
அதன் பின்னர் பேசிய திமுக எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சலசலப்பை ஏற்படுத்திய பாஜகவினரை கண்டித்தார்.
அதோடு, “கருப்பு முருகானந்தம், உனக்கு 100 பேர் வந்தால் எங்களுக்கு 200 பேர் வருவார்கள். ஆட்களை இறக்கி காட்டவா?” என மிரட்டும் தொணியில் பேசினார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
அவரது அடாவடிப் பேச்சைக் கண்டித்து பாஜகவினர் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.