கொழுப்பினால் வரும் பக்கவாத நோய்
கொழுப்பினால் வரும் பக்கவாத நோய் பற்றி இந்த வாரம் பார்ப்போம். நாம் உண்ணும் உணவில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாது உப்புகள், கனிமப் பொருட்கள் ஆகியவை தேவையான அளவு இருக்க வேண்டும். இந்த உயிர்ச் சத்துகளில் எவையேனும் அதிகரித்தாலும் சரி குறைந்தாலும் சரி வியாதிகளை உருவாக்குகின்றன. இதில் முக்கியமான உயிர்ச்சத்துகளான கொழுப்பைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
கொழுப்புச்சத்து பற்றிய மாறுபட்ட கருத்துகள் சமுதாயத்தில் நிலவி வருகின்றன. அதிக எண்ணெய் உபயோகிப்பதாலும், மாமிச உணவு உண்பதாலும் மட்டுமே கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. கொழுப்பை நமது கல்லீரல் தயாரிக்கிறது. அதிகப்படியான எந்தவகை உணவாக இருந்தாலும் அது கொழுப்பாக மாறி உடலில் படிகிறது. நம் உணவில் உள்ள கொழுப்பை நமது உடலானது அப்படியே எடுத்துக் கொள்வதில்லை. நம் உணவில் உள்ள சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலந்து கல்லீரலைச் சென்றடைகிறது.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
நமது கல்லீரல் இந்த சத்துகளைக் கொண்டு பல்வேறு வகையான கொழுப்புகளை [TGL, LDL, VLDL, HDL] உருவாக்குகிறது. இந்தக் கொழுப்புச்சத்தில் இருந்துதான் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு நொதிகள் தயாரிக்கப்படுகிறது. இந்தச் நொதிகளே நாம் அன்றாடம் இயங்குவதற்கும், சிந்திப்பதற்கும், மூளைச் செயல்பாட்டிற்கும் அவசியமாகிறது. நம் உடலால் தயாரிக்கப்படும் இந்தக் கொழுப்புச்சத்து நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றே.
ஒரு நாளைக்குத் தேவையான ஆற்றல் அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்றாற்போல் வேறுபடுகிறது. உதாரணத்திற்கு, ஆசிரியர் பணி அல்லது மற்ற அலுவலகப் பணிகள் செய்பவர்களுக்கு 1800 முதல் 2100 கிலோ கலோரிகள் வரை போதுமானது. இதற்கு அதிகமாக நாம் உணவு எடுத்துக் கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி நமது உடலில் முக்கியமாக வயிறு மற்றும் உடல் உறுப்புகளைச் சுற்றிப் படியத் தொடங்குகிறது.
இந்த அதிகப்படியான கொழுப்பே வியாதிகளை உருவாக்குகிறது. குழந்தை பிறந்தநாள் முதல் நமது இரத்தக் குழாய்களில் மாறுதல்கள் நடக்கத் தொடங்குகின்றன. நாம் உண்ணும் உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளும் போது அது கொழுப்பாக மாறி இரத்தக் குழாய்களில் படியத் தொடங்குவதால் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் உருவாகின்றன. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் உருவாகிறது.
தவறான உணவுப் பழக்கங்கள் மட்டுமல்லாமல் சிலருக்குக் கொழுப்பைச் செரிக்கக் கூடிய சில நொதிகளில் குறைபாடுகள் இருப்பதனாலும், தைராய்டு சுரப்பியின் சுரப்புத்தன்மை குறைவதாலும் மற்றும் மது பானங்கள் எடுத்துக் கொள்வதாலும் நம் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இந்தக் கொழுப்பில் நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என்று இரண்டு வகைகள் உள்ளன. LDL என்பது கெட்ட கொழுப்பு மற்றும் HDL என்பது நல்ல கொழுப்பு ஆகும். இதில் LDL அளவு அதிகரித்தாலோ அல்லது HDL அளவு குறைந்தாலோ பக்கவாத நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
நான் 2007-இல் பார்த்த பக்கவாத நோய்க்கும் 2017-இல் பார்க்கும் பக்கவாத நோய்க்கும் நிறைய வித்தியாசம் உள்ளதை உணர்கிறேன். தற்போது உள்ள பக்கவாத நோயின் தாக்கம் மிகவும் மோசமாக உள்ளது. அந்நோய் தாக்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நான் 2010 முதல் 2013 வரை சென்னையில் உள்ள இராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவரில் பக்கவாத நோயால் தாக்கப்பட்டோரைப் பற்றி ஆய்வு மேற்கொண்டேன். மக்களின் வாழ்வியல் முறை மற்றும் உணவு முறைகளின் மாற்றத்தினால் வரும் பக்கவாத நோயின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை ஆய்வின் முடிவு உறுதி செய்துள்ளது. மரபணுக் கோளாறினால் வரும் பக்கவாத நோயைவிட இதயம், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் வரும் பாதிப்புகளே அதிகமாக உள்ளன. எனவே பக்கவாத நோய் என்பது ஒரு காரணியால் மட்டும் வருவது இல்லை.
பல்வேறு காரணிகள் ஒருவரிடம் சேர்ந்து இருக்கும் போது பக்கவாத நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கிறது.
மூளைக்காய்ச்சல், மூளையைக் கிருமிகள் தாக்குவதனால் வரும் பக்கவாத நோய் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.