இரவில் விழித்தால் நோயில் படுப்போம்
பக்கவாத நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வாழ்வியல் முறைகளான உணவினைத் தொடர்ந்து உறக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம்.
‘நமக்கு உறக்கம் எப்படி வருகிறது!’ என்று தெரியுமா?…
நமது கண்களில் ‘ரெட்டினா’ என்ற ஒரு விழித்திரை உள்ளது. நாம் கண்களை மூடும்போது உண்டாகும் இருட்டை ‘ரெட்டினா’ உணர்ந்த பிறகு, நமது மூளையில் இருந்து மெலடோனின் என்னும் நொதி சுறந்து, நமக்கு உறக்கம் வருவதற்கான சமிக்ஞைகளை அனுப்புகிறது.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
நாம் அதிக வெளிச்சம் உள்ள திரைகளை அதாவது தொலைக்காட்சி, கணினி, மடிக்கணினி மற்றும் அலைப்பேசி போன்றவற்றை இரவில் பார்ப்பதால் மெலடோனின் நொதி சரியாக சுரப்பதில்லை. இதனால், இயல்பாக வரும் தூக்கம் கெட்டுப்போய் விடுகிறது.
அதேசமயம், பகல் முழுவதும் போதுமான உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், பகலில் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குபவர்களுக்கும் இரவு தூக்கம் படுத்தவுடன் வருவதில்லை. நமது அனைவரது கைகளிலும் மற்றும் வீட்டிலும் உள்ள கடிகாரம் போன்று நம் மூளையிலும் ஒரு கடிகாரம் உள்ளது. இந்த கடிகாரமானது நமது மூளையில் ‘ஹைப்போதலாமஸ்’ என்னும் பகுதியில் உள்ளது. நம் மூளை இரவில் ஓய்வு எடுக்கும் போதுதான் இது வேலை செய்கிறது. இந்த கடிகாரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், நம் வாழ்க்கையும் சரியாக இருக்காது. அப்படி என்ன வேலை தான் இது செய்கிறது? என்று கேட்கிறீர்களா!…
நமது உடல் இயல்பாக இயங்குவதற்கு நாளமில்லா நொதிகள் வேண்டும். பெண்களுக்கு முட்டைப்பை மற்றும் கருப்பை நன்கு வேலை செய்து மாதவிடாய் சுழற்சி முறையாக 28 – 45 நாட்களுக்கு ஒருமுறை வருவதற்கும், பிறந்த குழந்தை நன்றாக வளர்வதற்கும், தைராய்டு மற்றும் நாளமில்லா சுரப்பிகள் நன்கு வேலை செய்வதற்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தமது பணிகளை செவ்வனே செய்யவதற்கும் கட்டளைகளை பிறப்பிக்கின்றது. நமது மூளையில் உள்ள கடிகாரம் சரியாக செயல்படுவதற்கு இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை கண்டிப்பாக நமது மூளை ஓய்வில் இருக்க வேண்டும்.
இந்த நேரங்களில் மூளைக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்குவதால், அதாவது கண் விழித்திருப்பதால் பல்வேறு வியாதிகள் வருகின்றன. அதில், முக்கியமானவை பக்கவாதம், மாரடைப்பு, மன அழுத்தம், ஞாபகமறதி, குழந்தைப் பேரின்மை மற்றும் உயிரைப் போக்கும் பல்வேறு வியாதிகளும் அடங்கும்.
இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி, அலைப்பேசி மற்றும் மடிக்கணினி போன்றவை இரவு நேர தூக்கத்தை விழுங்கி விடுகின்றன. இன்றைய இளைய சமுதாயத்தினர் பெரும்பாலானோர் நேரம் தாழ்த்தி (இரவு 12 மணிக்கு மேல்) உறங்கி காலையில் தாமதமாக எழுகின்றனர். இது மிகவும் தவறான செயல் என்று உணர வேண்டும். பகல் தூக்கம் மற்றும் இரவு தூக்கம் இரண்டும் சமமானது அல்ல; இரவு தூக்கமே நமது மூளைக்குச் சிறந்தது. நமது உடலில் உருவாகும் கழிவுகளை சிறுநீரகமும், கல்லீரலும் வெளியேற்றுவதைப் போல, நமது மூளையில் உருவாகும் கழிவுகளான நச்சுப் பொருட்களை மூளையிலிருந்து இரவு உறக்கமே வெளியேற்றி நம்மை காலையில் புதிய மலராக மலரச் செய்கிறது.அப்போது தான் நாம் பகலில் செய்ய வேண்டிய வேலைகளை திறம்பட செய்ய முடியும்.
சராசரியான தூக்கத்தின் அளவு வயதுக்கேற்றார் போல் மாறுபடுகிறது. பிறந்த குழந்தை 20 மணி நேரமும், பள்ளி செல்லும் குழந்தைகள் 9 மணி நேரமும், 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 முதல் 8 மணிநேரமும், வயதானவர்கள் 5 முதல் 6 மணிநேரமும் உறங்கினால் போதுமானது. குறைவான உறக்கம் எவ்வாறு தீமையை ஏற்படுத்துகிறதோ, அதேபோல் அதிக உறக்கமும் தீமையையே ஏற்படுத்தும்.
எனவே, சூரியன் மறைந்ததும் நமது வேலைகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு 10 மணிக்குள் உறங்கச் சென்றால், நமது மூளை நம்மை வியாதி வராமல் பாதுகாத்துக் கொள்ளும்.