தொழில்அதிபருக்கு பஸ்ஸ்டாண்ட் விற்பனையா? தர்மபுரி ஹாட் டாக்…
தமிழ்நாட்டின் வடமாவட்டமாக உள்ள தர்மபுரி, வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும் ஒகேனக்கல் மற்றும் தீர்த்தமலை ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களும் கொண்ட மாவட்டமாகவும் தர்மபுரி விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட தர்மபுரி மாவட்டத்தின் ‘பேருந்து நிலையம்’ தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
தர்மபுரி பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ‘பி.ஆர்.இராஜ கோபால் கவுண்டர்’ என்ற பெயரில் இயங்கி வரும் தர்மபுரி பேருந்து நிலையமானது இடமாற்றம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பு முடிவு எடுக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சிப் பகுதிக்குள் உள்ள இந்த பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
மேலும் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க தற்போதைய பேருந்து நிலையம் ஏற்றது அல்ல என நகராட்சி நிர்வாக கூட்டத்தில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தர்மபுரியைச் சேர்ந்த தொழிலதிபர் டிஎன்சி இளங்கோவன் என்பவர் சென்னை-&பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பென்னாகரம் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள, தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை பேருந்து நிலையம் அமைப்பதற்காக தர்மபுரி நகராட்சிக்கு தானமாக வழங்கினார்.
தொழிலதிபர் டிஎன்சி இளங்கோவன் வழங்கிய இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து அப்போது எதிர்ப்புகள் கிளம்பவே பேருந்து நிலைய இடமாற்றப் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவைச் சேர்ந்த நாட்டான்மாது என்பவர் வெற்றி பெற்று நகராட்சித் தலைவரானார்.
நாட்டான்மாது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தொழிலதிபர் டிஎன்சி இளங்கோவன் பல்வேறு உதவிகளை வழங்கியதோடு “வைட்டமின் சி”யும் கொடுத்து உதவியுள்ளதாகவே பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த கூற்று உண்மையாகும் விதமாக தொழிலதிபர் இளங்கோவன் வழங்கிய அந்த 10 ஏக்கர் நிலத்தில் தான் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சியை நகராட்சித் தலைவர் நாட்டான்மாது முன்னெடுத்து வருகிறார்.
வரக்கூடிய நகராட்சி கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் இடமாற்ற அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது. நகராட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க அவர்களுக்கும் வைட்டமின் சி கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
மேலும் புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கான பணி ஒப்பந்தம் மகேந்திரா மற்றும் பி.வி.கே ஆகிய இரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து பணியை தொடங்க இரண்டு நிறுவனங்களும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு தொழிலதிபர் தானாகவே முன்வந்து நகராட்சிக்காக தனது சொந்த நிலத்தை இலவசமாக வழங்கும் போது அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கையே.! அங்கு தான் இருக்கிறது தொழிலதிபர் இளங்கோவன், விவரமாக காய் நகர்த்திய விவகாரம். “டிஎன்சி இளங்கோவன், புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் 10 ஏக்கரை மட்டும் நகராட்சிக்கு தானமாக வழங்கி விட்டு அதை சுற்றி இருக்கக் கூடிய நூற்றுக்கணக்கான ஏக்கரை தன்வசம் வைத்திருக்கிறார்.
இதன் மூலம் அந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் உயரும், சிறு குறு வணிகர்கள், வியாபாரிகள் வணிகம் நடத்துவதே சிரமம். புதிய பேருந்து நிலையம் அவர் சொல்லும் இடத்திற்கு சென்றால் முழுப்பயனையும் டிஎன்சி இளங்கோ மற்றும் அவரது குடும்பம் மட்டுமே அனுபவிப்பார்கள். இதனால் நகராட்சிக்கோ மற்ற தரப்பினருக்கும் எவ்வித பயனும் கிடையாது” என்கின்றனர் தற்போ துள்ள பேருந்து நிலையத்தை சுற்றி கடை அமைத்துள்ள வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகி கள்.
மேலும் அவர்கள் கூறுகையில், “இதில் சிறிய வியாபாரிகள் மிகப்பெரிய பாதிப்பை அடைவார்கள். அவர்களுடைய வாழ் வாதாரம் பாதிக்கப்படும். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இரண்டு நிறுவனங்களின் ஒன்று இளங்கோவிற்கு சொந்தமானது. இது மிகப் பெரிய முறைகேடு” என்று குமுறுகின்றனர்.
புதிய பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகு அதில் பெறப்படும் இலாபம் அனைத்தையும் அந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் பெற்றுக்கொண்டு மாதம் ரூ.4.61 லட்சம் மட்டும் தர்மபுரி நகராட்சி கொடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த திட்டத்தை பிபிபி ஸ்கிம் (றிஹிஙிலிமிசி-றிஸிமிக்ஷிகிஜிணி றிகிஸிஜிழிணிஸிஷிபிமிறி ஷிசிபிணிவிணி-றிறிறி ஷிசிபிணிவிணி) என்று கூறப்படுகிறது.
“புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்படும் கடைகளுக்கான வாடகையாக பல லட்சம் ரூபாய் இளங்கோ தரப்பினர் பெற்று கொண்டு லாபம் ஈட்டி வெறும் ரூ.4.62 லட்சத்தை மட்டும் நகராட்சிக்கு கொடுப்பது என்பது மிகப் பெரும் முறைகேடு, டோல் பிளாசாக்கள் இது போன்று தான் செயல்படுகிறது. அது போன்றே தற்போது புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சியும் தர்மபுரியில் நடைபெற்று வருகிறது” என்று கூறுகின்றனர் வணிகர் சங்க நிர்வாகிகள்.
இது தொடர்பாக அனைத்து வணிகர் சங்கச் செயலாளர் ரவிச்சந்திரன் நம்மிடம் கூறுகையில், “2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின், “வியாபாரிகளின், வணிகர்களின், பொது மக்களின் வளர்ச்சிக்காக புதிய பேருந்து நிலையம் தற்போது இருக்கக்கூடிய இடத்திலேயே தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் மக்களுடைய வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்தார்.
இது மட்டுமல்லாது திமுக மாவட்ட அளவில் இதை வாக்குறுதியாக முன்னெடுத்து தர்மபுரியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த நகராட்சி தலைவர், முதலமைச்சர் சொன்ன கருத்துக்கு எதிராக செயல்படத் தொடங்கியிருக்கிறார்” என்றார்.
இப்படி பல்வேறு தரப்பினரும் இளங்கோவன் வழங்கிய இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நகராட்சி சேர்மன் நாட்டான் மாதுவிடம் இதுகுறித்து நாம் கேட்ட போது, “புதிய பேருந்து நிலையம் அமைப்பது நகராட்சிக்கு லாபம் தான். இடத்தையும் தருகி றார், கட்டுவதற்கான கட்டுமான செலவு ரூ.42 கோடியையும் அவரே முதலீடு செய்கிறார். அதுமட்டுமல்லாது நகராட்சிக்கு மாத வருமானமாக ரூ.4.61 லட்சம் வருமானம் கிடைக்க உள்ளது. அதனால் நகராட்சி லாபம் தான்” என்றார்.
“இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் பேருந்து நிலையத்தால் ஒரு குடும்பம் மட்டுமே பயன் அடைவர். பல கடைகள் அமையும் இடத்தில் சொற்ப அளவிலான மாதத் தொகையை அந்த நிறுவனத்திடமிருந்து நகராட்சி பெறக் காரணம் என்ன” என்று நாம் கேட்ட கேள்விக்கு, “அதைப்பற்றி எனக்கு அவசியமில்லை. போன கவர்மெண்ட் போட்டது, நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று கூறினார். தர்மபுரியில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா அல்லது தொழிலதிபர் இளங்கோவன் குடும்பத்தாரின் ஆசை நிறைவேறுமா என்பதற்கான தீர்வு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் தான் உள்ளது.