திருச்சி – காட்டூர் – பாலாஜி நகர் ”திருவள்ளுவர் நாள்” விழாவில் கலந்துகொண்டு சிறபித்த அமைச்சர் அன்பில் மகேஸ் !
இந்த ஆண்டு பொங்கலுக்கு 9 நாள் விடுமுறையாக அமைந்துவிட்டது. அதனால் பொங்கல் விழா முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பொங்கல் விழா தமிழகம் முழுவதும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. திருச்சி காட்டூரை அடுத்துள்ள பாலாஜி நகரில் தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் 15.01.2025ஆம் நாள் திருவள்ளுவர் நாள் பண்பாட்டு விழாவாக திருவள்ளுவர் பேரவை நடத்தியது. இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழாவிற்கு திருவள்ளுவர் பேரவையைச் சார்ந்த உ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். என். செல்வராஜ் வரவேற்புரையாற்றினார். இவ் விழாவிற்கு திருவள்ளுவர் பேரவையைச் சார்ந்த பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். விழாவைத் தொடங்கி வைத்து பி.நாராயணசாமி உரையாற்றினார். திருவள்ளுவர் நாள் குறித்து திருச்சி மிசா. சாக்ரடீஸ், உழவர் தினம் குறித்து ஆர்.நாராயணசாமி ஆகியோர் உரையாற்றினர்.
பாலாஜி நகரில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் கருத்துக்குக் கதை சொல்லுதல், நாட்டுப்புற பாடல்கள் பாடும் போட்டி ஆகியவை நடைபெற்றன. இப் போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் தங்களின் உரையைத் தொடங்கும் முன்னர் ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று சொல்லியது, அழகிய தமிழில் உரை நிகழ்த்தியது என்பது தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் உன்னத செயலாக இருந்தது.
காரணம், போட்டிகளில் பங்கெடுத்த பல மாணவ, மாணவியர் ஆங்கில வழியில் மெட்ரிக்குலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்கள் தமிழில் 30 திருக்குறளைப் பிழையின்றி ஒப்புவித்தது, திருக்குறள் கருத்துக்கு ஏற்றார்போல் கதைகள் சொல்லியது, சினிமா மற்றும் பக்தி பாடல்கள் நீங்கலாக நாட்டுப்புறப் பாடல்கள் பாடியது என்பன போன்ற அனைத்தும் மாணவ, மாணவியரின் தனி திறமையை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் உரையாற்றும்போது,“தமிழ்நாட்டிற்குப் பல பெருமைகள் உள்ளன. அதில் முதன்மையானது வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு என்று மகாகவி பாரதியார் குறிப்பிட்டிருப்பது உண்மையில் பொருத்தமுடைய ஒன்றாகும்.

இந்திய, ஆசிய மற்றும் உலக மொழிகளில் 46 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் வட்டார மொழிகளில் என 120 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவுள்ளது என்று சென்னையில் உள்ள செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பார்வைத்திறனற்றவர்கள் திருக்குறளைப் படிக்க பிரெய்லி எழுத்து முறையிலும் திருக்குறள் வெளியிடப்படவுள்ளது என்றும் செம்மொழி நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளுக்கு மட்டுமே உண்டு. இரஷ்யாவில் 1971ஆம் ஆண்டு சென்ற நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு புதைக்கப்பட்ட காலப்பெட்டகம் 2050ஆண்டு திறக்கப்படவுள்ளது. திறக்கப்படும் காலப்பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றிருக்கும். ஒரு பக்கம் திருக்குறளின் தமிழ் வரிவடிவமும் இன்னொரு பக்கம் ஜி.யு.போப்-இன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம் பெற்றிருக்கும்.
இன்னும்மொரு 25 ஆண்டுகள் கழித்தும், திருவள்ளுவரையும், திருக்குறளையும் உலகம் பாராட்டி போற்றிக் கொண்டிருக்கும். இந்த நிலையில், பாலாஜி நகரில் திருவள்ளுவர் பேரவை ‘பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறிய வள்ளுவர் நாளைக் கொண்டாடி வருவது என்பது எதிர்காலத்தில் நடக்கப்போகும் சமுதாய மாற்றத்திற்கு இந்த விழா வித்தாக அமையும் என்பதில் ஐயமில்லை” என்று குறிப்பிட்டார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாலாஜி நகர் திருவள்ளுவர் பேரவையின் சார்பில் பொங்கல் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. பாலாஜி நகரில் வாழும் மக்கள் பெரும்திரளாக இவ்விழாவில் கலந்துகொண்டது சிறப்பான செய்தியாகும். இவ்விழாவில் பாலாஜி நகர் மாமன்ற உறுப்பினர் திரு.எல்.ரெக்ஸ், மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் காயத்திரி சுதாகர், முனைவர் சூரியகுமார், முனைவர் லில்லிநேசம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜூ விழாவில் நிறைவுரையாற்றினார். பி.செந்தில்குமார் இறுதியாக நன்றியுரை நிகழ்த்தினார். திருவள்ளுவருக்கு விழா எடுத்து, மாணவ, மாணவியர்களுக்கு திருக்குறளை மனதில் பதிய வைத்த திருவள்ளுவர் பேரவையின் இந்த செயல்பாடுகள் தமிழகம் முழுவதும் பரவினால் பாரதிதாசன் கூறியதுபோல், ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்னும் சிந்தனை செயலாக்கம் பெறும் என்பது உறுதி.
— ஆதவன்.