விழிக்கும் நியூரான்கள் – 2

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான பகுதி மனித மூளை தான். இங்கிருந்தே மனித உடலின் அனைத்துவிதமான செயல்களுக்கும் கட்டளை இடப்படுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல, மனித மூளை இல்லாமல் மனிதனுடைய செயல்கள் எதுவும் நடைபெறாது.

இந்த மூளையானது எந்தவித பிரச்சினைகளுமின்றி செயல்பட்டால் தான் நாம் இயல்பாக வாழ முடியும்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் பார்க்கும்போது, நமது மூளையானது மிகவும் தனித்துவம் வாய்ந்தது. எனவே தான் கபால எலும்புக்குள் அது பத்திரமாக  பாதுகாக்கப்படுகிறது. மனித மூளைகளிலேயே ஆண் மூளைக்கும், பெண் மூளைக்கும் எடை விகிதத்திலும் சரி, செயல்திறனிலும் சரி நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு பெண் மூளையின் எடையானது 1350 கிராம் எடையிலும், ஆண் மூளையின் எடையானது 1450 கிராம் என்ற அளவிலும் இருக்கும். மூளையின் தனித்துவம் என்னவென்றால், நமது வலது மூளையானது இடது பக்க உடலையும், இடது மூளையானது வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, வலது மூளையில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அது இடது பக்க கை, கால் மற்றும் முகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

3

Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.

4

நமது மூளைக்கு இரத்தமானது இதயத்தில் இருந்து இரத்தக் குழாய்களின் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. நம் மூளையானது நன்றாக செயல்பட வேண்டுமானால், சீரான இரத்த ஓட்டம் தடையின்றி மூளைக்குச் சென்று கொண்டிருக்க வேண்டும். இந்த இரத்த ஓட்டத்தில் 3 வினாடிகளுக்கு மேல் தடை ஏற்பட்டால் மூளை அதன் பணிகளை செய்ய இயலாது போய்விடும்.

அந்தவகையில், பக்கவாத நோய் (ஸ்ட்ரோக்) என்பது மூளையில் உள்ள இரத்தக் குழாய்கள் அடைப்பதாலோ அல்லது இரத்தக் குழாய்கள் வெடித்து நமது மூளைக்குள் இரத்தம் கசிவதாலோ வருகிறது (பக்கம் + வாதம் = பக்கவாதம்). ஒரு பக்க கை, கால் மற்றும் முகம் உட்பட உடலின் ஒரு பகுதி மட்டும் செயல் இழந்து போவதையே பக்கவாதம் என்கிறோம்.

இரத்தக் குழாயினுடைய அடைப்பைப் பொறுத்து தான் நோயினுடைய அறிகுறிகளும் அதனுடைய பாதிப்புகளும் இருக்கும். இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பினால் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால், அவரை நான்கரை மணி நேரத்திற்குள் நரம்பியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த நபரை பக்கவாத நோயிலிருந்து ஓரளவு காக்க முடியும். மற்றபடி, இரத்தக் குழாய் வெடித்து அதன் கசிவினால் பக்கவாதம் ஏற்பட்டால், எதனால் அந்த இரத்தக் கசிவு ஏற்பட்டது என்பதனையும், அதன் காரணிகளையும் கண்டுபிடித்து அதன் பின்னர் தான் சிகிச்சையளிக்க முடியும்.

பக்கவாதம் உண்டாகவிருப்பதை ஒருசில அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். ஒரு பக்கமாக கை,கால் செயல் இழத்தல்; ஒரு பக்கமாக வாய் கோணல்; பேச முடியாமல் போதல்; பேச்சில் தடுமாற்றம்; திடீரென ஒரு பக்கமாக கை, கால்கள் உணர்ச்சி குறைதல்; ஒரு கண் பார்வை மறைத்தல், முற்றிலும் பார்க்க முடியாமல் போதல் அல்லது பார்வை இரட்டையாகத் தெரிவது; திடீரென நடையில் தள்ளாட்டம்; திடீரென விக்கல் ஏற்பட்டு சாப்பிடும் போது புரை ஏறுவது; திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு நினைவு இழத்தல் இந்த அறிகுறிகளில் எவை தென்பட்டாலும் உடனே நரம்பியல் நிபுணரை அணுகி ஆலோசனையை பெற வேண்டும்.

100 பேருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டால், அதில் 30 பேருக்கு பக்கவாத நோய் சரியாகிவிடும். மீதமுள்ள 30 பேருக்கு 50-90 % வரை சரியாகிவிடும். மற்றொரு 30 பேருக்கு 10-50% வரை பக்கவாத நோய் சரியாகிவிடும். மீதமுள்ள 10 பேர் பக்கவாதம் வந்த ஒரு மாதத்தில் இறந்துவிடுகின்றனர்.

 

இப்படியான இந்த பக்கவாத நோயை மற்ற நோய்களைப் போல பார்க்க முடியாது. பக்கவாத நோய் என்பது ஒரு தனி மனிதனை மட்டும் பாதிக்கக் கூடியது அல்ல. ஏனென்றால், பக்கவாத நோயானது பெரும்பாலும் ஆண்களையே அதிகமாக தாக்குகிறது. எனவே, குடும்பத்தின் தலைவனாக இருக்கும் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுமானால், அதுவரை அவரது உழைப்பினாலும் சம்பாதியத்தாலும் இயங்கிவந்த குடும்பத்தின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும். பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் இதுபோன்று ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால் அந்த ஒட்டுமொத்த குடும்பமுமே நிலைகுலைந்துவிடும். எனவே, இந்த பக்கவாதத்தினை தடுப்பது தான் சாலச்சிறந்தது.

இந்த பக்கவாத நோயானது எதனால் ஏற்படுகிறது? பக்கவாத நோய் வராமல் தடுப்பது எப்படி? ஒருவேளை பக்கவாத நோய் ஏற்பட்டுவிட்டால் என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதனை பார்ப்போம்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.