மாநில சுயாட்சி இளைஞர்களுக்கு வேண்டும் விழிப்புணர்வு

0

புலவர் விடுக்கும் திறந்த மடல்

புலவர் க.முருகேசன் மூன்று கண்களை உடையவர். அதனால் அவர் சிவன் அல்ல. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் இவர்களின் கொள்கைகளைக் கருத்துகளைக் கண்ணாகக் கொண்டவர். எதிலும் சமரசம் செய்து கொள்ளாதவர். இலட்சியங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு கொண்டவர். தமிழ்ச் சமூகத்தை முன்னேற்றுவதற்கு யார் முன்வந்தாலும் அவர்களை ஆதரிக்கும் உள்ளம் கொண்டவர். சமூக மாற்றம், முன்னேற்றம் – இவற்றிற்கான சிந்தனைகள் இளைஞர்களிடம் மையங்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர். அந்த நோக்கில்தான் இந்தத் திறந்த மடல் -ஆசிரியர்

https://businesstrichy.com/the-royal-mahal/

மாநில சுயாட்சியின் தேவை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தணும்

அன்பிற்குரிய விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு, வணக்கம்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக மட்டுமல்லாமல், ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகின்ற தமிழர்களின் குரலாகவும் சமூக மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களின்  பணியைப் பாராட்டுகிறேன்.

நான் வாழ்ந்துவரும் திருச்சி, வேங்கூருக்கு அருகே பழம்பெருமையை நிலைநிறுத்திக் கல்லணை வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்தக் கல்லணையைக் கட்டியது சோழமன்னன் கரிகாலன். மன்னன் கரிகாலன் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவருக்குத் திருமாவளவன் என்ற பெயர் சூட்டப்பட்டது. உலகில் சமதரையில் கட்டப்பட்ட முதல் அணை கல்லணை என்னும் பெருமையுடையது. வேளாண் நிலங்கள் விளைச்சல் பெற அணை கட்டிய கரிகால் சோழனின் ஆட்சிப் பெயரான திருமாவளவன் என்ற பெயரை 45 ஆண்டுகளுக்கு முன் பிறந்த என் முதல் மகனுக்குச் சூட்டி மகிழ்ந்தேன்.

எனக்குப் பிடித்த திருமாவளவன் என்ற பெயரில் கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, தாங்கள் அரசியல் களத்தில் களமாடி வருவது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். கொண்ட கொள்கையில் வழுவாமல், நழுவாமல், உறுதித் தன்மையோடு கடமையாற்றி வரும் உங்களுக்கு என் எண்ணங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்பியே இந்தத் திறந்த மடலை எழுதுகிறேன்.

பெற்ற பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தான் பெயர் வைப்பார்கள். தமிழுணர்வு கொண்ட தாங்கள் இராமசாமி என்ற தங்கள் தந்தையின் பெயரைத் தொல்காப்பியன் என்று பெயர் மாற்றி இரா.திருமாவளவன் என்ற பெயரைத் தொல்.திருமாவளவன் என்று மாற்றிக் கொண்டது அரசியல் வரலாற்றில் நீங்கள் ஒருவர்தான். திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்கள் பலர் தங்களின் பெயர்களை (தட்சிணாமூர்த்தி-கருணாநிதி, நாராயணசாமி-நெடுஞ்செழியன், இராமையா-அன்பழகன்) மாற்றிக் கொண்டார்கள் என்பதும் வரலாறுதான்.

உங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2ம் கட்டத் தலைவர்களின் பெயர்கள்கூடத் தமிழில் மாற்றியமைத்துக் கொண்டனர் (சிந்தனை செல்வன், வன்னியரசு, குணவேந்தன், தமிழாதன்) என்ற செய்தியறிந்து பெருமை கொண்டேன். தங்களின் கட்சியில் தமிழ் மொழி, இன உணர்வும் கலை உணர்வும் மேலோங்கியிருக்கிறது. இந்த அடிப்படை உணர்வு குலைந்துவிடாமல், வலிமை சேர்த்து, கட்சியின் அடிமட்டத் தொண்டனிடம் இந்த உணர்வைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

1983ல் ஈழப்பிரச்சனையொட்டி தமிழ்நாட்டில் மாணவர் போராட்டம் வெடித்தபோது, அப்போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டதுதான் தங்களின் முதல் அரசியல் கள நுழைவு.

1985-இல் தலித், மீனவ மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இளைஞர் நல இயக்கத்தின் பொதுச்செயலாளர். இப்படிக் கல்லூரிக் காலங்களிலே ஓர் இலட்சிய உணர்வு டன் அமைப்புகளைத் தாங்கள் கட்டமைத்த வரலாற்றைப் படித்தபோது மனதில் பெருமிதம் ஏற்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் ஈழப்பிரச்சினைக்காகப் பல போராட்டங்களை நடத்திச் சிறைக்கும் சென்றிருக்கின்றீர்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

1986-ல் ஈழத்திற்குப் பயணம் மேற்கொண்டு, தமிழ் மாணவர்களைச் சந்தித்து, மாணவர்களை ஒருங்கிணைத்து இலங்கை அரசை எதிர்த்து ஈழத்தில் போராட்டம் நடத்திய செய்தி வரலாற்றில் பெருமைமிகுந்த செய்தியாகப் பார்க்கிறேன்.

90களில் தாங்கள் ‘இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்’ என்னும் அமைப்பின் மாநிலத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப் பட்டீர்கள். 1991இல் அமைப்பின் பெயரை ஈழவிடுதலைக்காகப் போராடி வரும் விடுதலைப்புலிகளின் நினைவாக ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்று மாற்றி அமைத்தீர்கள்.

ஆரம்பக் காலத்தில் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க மாட்டோம் என்று அறிவிப்பையும் செய்தீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு, ஈழப் பிரச்சனை, பஞ்சமி நிலம் மீட்பு என 10 ஆண்டு காலம் சமூக முன்னேற்றத்திற்காகக் களமாடி வந்தீர்கள்.  1999ஆம் ஆண்டு கருப்பையா மூப்பனார் அவர்களின் அழைப்பை ஏற்றுத் தேர்தல் அரசியலில் நுழைந்தீர்கள். அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் நீங்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டின் அடிப்படையில் தமிழகத்தின் அரசியல்களம் உங்களைத் திரும்பிப் பார்த்தது.

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்   மங்களூரில்      சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தாங்கள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டீர்கள்.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அரசியல் மதிப்பைக் கட்சிகள் தரமறுக்கின்றன என்று குற்றஞ்சாட்டிய தாங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்ததன் மூலம், பதவியை வைத்துக்கொண்டு, சுகமாக வாழலாம். சொத்து சேர்த்துக் கொள்ளலாம் என்ற பொதுப்புத்தியின் மீது சம்மட்டி கொடுத்தீர்கள். அரசியல் களத்தில் திருமாவளவன் உயர்ந்து நின்றார் என்றால் மிகையில்லா உண்மையாகும்.

2004இல் பழ.நெடுமாறன் உருவாக்கிய ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்னும் அமைப்பில் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்தது. அந்த இயக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்திருந்தது. இந்நிலையில், எலியும் பூனையுமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ் உணர்வு அடிப்படையில் ஒன்றாக இணைந்து செயல்பட்டது அரசியலில் புதிய செய்தியாகப் பார்க்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் மருத்துவர் இராம தாசுக்கு ‘தமிழ்க்குடி தாங்கி’ என்ற பட்டத்தையும் வழங்கி, விடுதலைச் சிறுத்தைகள் சமூகத்தில் அனைவரோடும் இணக்கமாகவே வாழ்வோம் என்பதை உலகுக்கு அறிவித்தது சிறந்த முன்முயற்சியாகப் பலராலும் பாராட்டப்பட்டது.

2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து 9 இடங்களில் போட்டியிட்டு, 2 இடங்களில் மட்டுமே விசிகவால் வெற்றிபெற முடிந்தது. 2006ஆம் ஆண்டு அதிமுக அரசு நடத்திய உள்ளாட்சித் தேர்தலில் ‘ஜனநாயகம் காக்கப்படவில்லை’ என்று கூட்டணியிலிருந்து வெளியேறியதன் மூலம் தாங்கள் அரசியல் களத்தில் இலட்சிய உணர்வோடுதான் செயல்படுவதற்குத் தக்க சான்றாக அந்நிகழ்வு அமைந்திருந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி அமைத்து, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றம் சென்றீர்கள். நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்த போது, சாதியக் கட்சியாக எண்ணப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்துத் தமிழ் மக்களுக்குமான கட்சியாகப் புதிய தோற்றம் கொண்டது. எல்லாத் தரப்பு தமிழ் மக்களும் உங்களின் செயல்பாடுகளின் மீது அன்பு கொண்டனர். அதனால் தாங்கள் ‘எழுச்சித் தமிழர்’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டீர்கள். இந்த அடைமொழிக்கு ஏற்பவே தங்களின் அண்மைக் கால அரசியல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையின் இளம் அரசியல் தலைவர்களில் தாங்கள் நம்பிக்கையூட்டுபவராக இருப்பது பாராட்டுக்குரியதாகும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 என எல்லா இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், வலது, இடது கம்யூனிஸ்ட்டு கட்சிகள் தவிர்த்து, ஏனைய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தியபோது, தாங்கள் அக்கோரிக்கையை ஏற்க மறுத்து, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை சின்னமான ’பானை’ சின்னத்தில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதில் எனக்கு வருத்தமில்லை. உதயசூரியனில் நின்று இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால், நான் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை திமுக உறுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நடத்தமுடியாது. ஒரு வாக்கில் வென்றாலும் வெற்றிதான்’ என்று அளித்த விளக்கத்தின் மூலம் தாங்கள் தனித்தன்மையோடு அரசியல் நடத்தவேண்டும் அதில் துளியளவும் சமரசம் செய்துகொள்வதில்லை என்பதை அறிந்து கொண்டேன்.இதன் தொடர்ச்சியாக, 2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி அமைத்து 6 தொகுதியில் சுயேட்சை பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் விசிக வெற்றி பெற்றது. அதில் இருவர் பட்டியலினத்தவர். இருவர் பட்டியலினம் சாராதவர்கள். ஒருவர் வன்னியர், இன்னொருவர் இஸ்லாமியர். இந்த வெற்றி யின் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பட்டியலின மக்களுக்கான கட்சியாக மட்டுமல்லாமல் தமிழர்கள் அனைவருக்குமான கட்சி என்பது மெய்ப்பிக்கப்பட்டது.

அரசியலைத் தாண்டி, பெரியார், அம்பேத்கர் சிந்தனை களை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியைக் கடமையாகக் கொண்டிருக்கின்றீர்கள். ‘அத்து மீறு’ ‘தமிழர்கள் இந்துக்களா?’ ‘இந்துத்துவத்தை வேரறுப்போம்’ என்ற புத்தகங்களையும் எழுதி, சனாதனத்தை வலியுறுத்தும் பாஜகவுக்குத் தற்போது சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றீர்கள்.

நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் இந்தியில் பதில் சொன்னால் அதற்கு எதிராகத் தாங்கள் தமிழில் கருத்துகளை முன்வைப்பது சிறப்பு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணியோடு நல்லுறவு கொண்டு, பெரியார் திடலில் நீங்கள் ஆற்றும் உரைகள் திராவிடக் கருத்தியலுக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோடு நல்லுறவு கொண்டு திமுகவின் கருத்தியலுக்குப் பெருமை சேர்த்து வருகின்றீர்கள்.

ஒன்றிய அரசு மாநில அரசுகளின் அதிகாரங் கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு, மாநில அரசுகளை மாநகராட்சி அளவுக்கு மதிக்கும் போக்கு உள்ளது. மருத்துவ தகுதித் தேர்வு NEET தமிழகத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற சட்டமுன்வடிவின் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது.  தமிழ்நாட்டிற்கு 21ஆயிரம் கோடி GST பங்குத் தொகையை உரிய காலத்தில் வழங்காமல் நிதி அமைச்சர் உள்நோக்கத்தோடு காலம் தாழ்த்தி வருகிறார். இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க எல்லா வகையிலும் ஒன்றிய அரசு முயற்சி செய்துவருகின்றது.   இதையெல்லாம் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் இளைஞர்களைக் கொண்டு போராட்டங்களை நடத்தி, தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க தாங்கள் செயல்பட வேண்டும் என்றும், மாநிலசுயாட்சி தேவையின் காரணங்களையும் விளக்கியும் இளைஞர்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  இன்றைய அரசியல் களத்தில் பெருமளவு இளைஞர்களைக் கவர்ந்துள்ள அரசியல் தலைவர்களில் முதன்மை இடத்தில் உள்ள தாங்கள், இளைஞர்கள் புதிய சிந்தனைகளைப் பெற்று, தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழைத்திட, தாங்கள் தொய் வில்லாது உழைக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

(அடுத்த மடலில் சந்திப்போம்)

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.