அதிமுகவைக் கூட்டணியில் கொண்டுவர பாஜக பகீரத முயற்சிகள் !

தற்போது வெளிவரும் கருத்துக்கணிப்புகள் பாஜக 240 தாண்டாது, 200ஐ தாண்டாது என்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து 2024 தேர்தலில் ...

0

அதிமுகவைக் கூட்டணியில் கொண்டுவர தொடர்ந்து பாஜக பகீரத முயற்சிகள் !

டந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மக்களவையின் கடைசி கூட்டத் தொடரில் தலைமை அமைச்சர் மோடி, “வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களைப் பெறும் என்றும் தேசிய ஜனநாயகக்கூட்டணி (NDA) 400 இடங்களைக் கைப்பற்றும்” பலத்த மேசை தட்டலுக்கிடையே அறிவித்தார். தொடர்ந்து இந்தியா டு டே, டைம்ஸ் நௌ போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளிலும் பாஜக தேசிய அளவில் 305 இடங்களைக் கைப்பற்றி 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய தேர்தல் கணிப்பும் வடநாட்டு ஊடகங்கள் சொன்னதையே வழிமொழிந்தே இருந்தது.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், கோவா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற பல மாநிலங்களில் தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு முடியவில்லை என்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவரும் கருத்துக்கணிப்புகள் பாஜக 240 தாண்டாது, 200ஐ தாண்டாது என்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக 400 இடங்களைப் பெறும் என்று மோடி கூறிய தகவல் வடநாட்டு ஊடகங்களால் 400 இடங்களைப் பெறும் என்று கட்டமைக்கப்பட்டது. தற்போது அந்தக் கட்டமைக்கப்பட்ட கருத்துக்கணிப்பு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையால் உடைத்தெறிப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இதனையடுத்துக் கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிர்நிலையில் இருந்த மதச்சார்பற்ற ஜனதாதளத்தோடு பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆந்திராவில் ஜெகன் மோகனும், சந்திரபாபு நாயுடுவும் போட்டிப்போட்டுக் கொண்டு பாஜகவை ஆதரிக்க முன்வந்துள்ளன. இதனால் பாஜக ஆந்திராவில் யாருடனும் கூட்டணி சேராமல் “அதிக இடங்களில் யார் வெற்றி பெற்றாலும் மக்களவையில் எங்களுக்கு இடங்கள் குறைந்தால் ஆதரிக்கவேண்டும்” என்ற வேண்டுகோள் வைத்துள்ளது. பீகாரில் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிதிஷ்குமாருடன் இதுவரை கூட்டணியும் தொகுதி பங்கீடும் நடைபெறவில்லை. ஒரிசாவில் சட்டமன்ற / நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்து நின்று வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் நவீன்பட்நாயக் அவர்களைச் சந்தித்துக் கூட்டணியில் சேரப் பாஜக வற்புறுத்தியுள்ளது. இதெல்லாம் வடநாட்டில் பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த எண்ணிக்கையில் இடங்களைப் பெறும் என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

- Advertisement -

- Advertisement -

பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்துபோய் உள்ள அதிமுகவை மீண்டும் கூட்டணியில் கொண்டு வரப் பாஜக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. பத்திரிக்கையாளர் குபேந்திரன் செய்தி ஊடகமென்றில் பேசும்போது,“கடந்த மார்ச் 5ஆம் தேதி இரவு பாஜகவுக்கும், எடப்பாடிக்கும் நெருக்கமான ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் எடப்பாடியைச் சந்தித்துள்ளார். நான் மோடி, அமித்ஷாவின் தூதுவராக வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக அதிமுகவோடு கூட்டணியைத் தொடர விரும்புகின்றது. நீங்கள் எந்தக் கோரிக்கை வைத்தாலும் பாஜக ஏற்கத் தயாராகவே உள்ளது. அண்மையில் வெளிவந்த கருத்துக்கணிப்புகளில் திமுக 38% வாக்குகளைப் பெறும் என்றும் பாஜக+அதிமுக இணைந்தால் 35% வாக்குகளைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் 5% பாமக 1% தேமுதிக மற்ற கட்சிகள் இணைந்தால் 42% வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பாஜக அதிமுக கூட்டணி 30 இடங்களிலும் திமுக 9 இடங்களிலும் வெற்றிபெறும் நிலை ஏற்படும். கூட்டணி பிளவால் திமுக தமிழ்நாடு+பாண்டிச்சேரி உட்பட 40 இடங்களிலும் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. உங்களுக்கும் பாஜகவுக்கும் திமுகவைத் தோற்கடிப்பதில் கொள்கையளவில் ஒற்றுமை இருக்கையில் மீண்டும் பிளவுபட்ட கூட்டணி ஏன் ஒன்றுசேரக்கூடாது” என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட எடப்பாடி,“வெற்றியோ தோல்வியோ இனிப் பாஜகவோடு கூட்டணிக்கான வாய்ப்பு இனி எப்போதும் இல்லை” என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார். இந்தத் தகவல் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 bismi svs

இந்நிலையில் கடந்த மார்ச்சு 6ஆம் தேதி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். நட்டா உள்ளிட்ட பாஜக முன்னணித் தலைவர்களைச் சந்தித்த அண்ணாமலை தமிழ்நாட்டின் தேர்தல் நிலவரம் குறித்தும், பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில், பாஜக தற்போது உள்ள 3% வாக்குவங்கியை 13% – 18% உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும், வெற்றி வாய்ப்பு ஒரு தொகுதியில்கூட இல்லை என்பது தெளிவானது. தேசிய அளவில் 400 இடங்களைப் பெற்று 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கப்போகும் பாஜகவுக்குக் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒரு இடம்கூடக் கிடைக்காது என்பதில் கேரளாவில் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பான கட்சிகள் இல்லை.

தமிழ்நாட்டில் அப்படியில்லை, கூட்டணியில் இருந்த அதிமுக சுமார் 25%-28% வாக்குவங்கியுள்ள கட்சி. கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுள்ளது. அந்தக் கட்சியோடு கூட்டணிக்குப் பேசிப்பார்த்துக் கூட்டணிக்கு ஒத்துக்கொண்டால் நல்லதுதானே என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மார்ச்சு 6ஆம் தேதி இரவு தலைமை அமைச்சர் மோடி கூட்டணிக்காக அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு பேசத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். எடப்பாடியின் உதவியாளர்.“கூட்டணிப் பற்றி பேச இனி வாய்ப்பில்லை” என்று எடப்பாடி கூறிய தகவலை அவரின் உதவியாளர் மோடியிடம் கூறியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் லட்சுமி ஊடக விவாதமொன்றில் கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனிக்கட்சி நடத்திக் கொண்டிருக்கும் டிடிவி தினகரன் – இருவரும் பாஜக கூட்டணியில் இடம்பெறுவோம் என்று கூறிவரும் நிலையில் இதுவரை பாஜக இந்த இருவரையும் கூட்டணியில் இணைக்கவில்லை. காரணம் தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் அதிமுகவைக் கூட்டணியில் கொண்டு வரத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தேவைப்பட்டால் அதிமுகவோடு கூட்டணியை உறுதி செய்ய உள்துறை அமித்ஷா எடப்பாடியைச் சந்திக்கச் சென்னை வருவார் என்ற தகவலும் உள்ளது. அதைப்போலவே மார்ச்சு 22ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகைதரும் தலைமை அமைச்சர் மோடி எடப்பாடியை நேரில் சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. அதிமுகவின் முன்னணித் தலைவர் தங்கமணி, வேலுமணி, விஜய் பாஸ்கர் போன்றவர்களையும் பாஜகவின் தேசியத் தலைமை விரைவில் சந்திக்கும் என்ற பரபரப்பான தகவலும் உள்ளது. பாஜகவின் தற்போதைய நிலவரம் மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்துப் பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளைப் பெற்றுவிடவேண்டும் என்பதே பாஜகவின் தற்போதைய குறிக்கோளாக உள்ளது.

சற்றும் தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தனைப்போல அதிமுகவோடு கூட்டணியை மீண்டும் அமைக்கவேண்டும் என்ற முயற்சியில் பாஜக தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகின்றது. அதிமுக மீண்டும் பாஜக கூட்டணியில் இணையுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி என்பதே உண்மையே.

-ஆதவன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.