ரெளடிகளுக்கு எல்லோரும்காசு கொடுத்த பொழுது-நீ தான் கசையடி கொடுத்தாய்- தோழர் லீலாவதி நினைவு நாள்

1

இன்று தோழர் லீலாவதி நினைவு நாள்.
தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் 1997 ல் எழுதிய கவிதை.

தோழர் லீலாவதி
தோழர் லீலாவதி

உன் முகத்தை மீண்டும்
பார்க்கவேண்டுமெனத் தோன்றுகிறது.

தபால்பையைத் தொங்கவிட்டு
நீ மீண்டும் நடந்து வரவேண்டும்

கைகளை உயர்த்தி நீ முழங்கிய முழக்கம்
மீண்டும் காதில் விழவேண்டும்

அதிர்ந்து பேசத்தெரியாத
உன் அருகில் நின்று
இன்னொரு முறை பேசவேண்டுமென
ஆசையாய் இருக்கிறது.

யாரிடம் சொல்ல இதையெல்லாம்?

வெட்டுப்பட்ட உடலருகில் கதறிக் கதறி அழுத
உன் குழந்தைகளைப் பார்த்து
நெஞ்சு வெடித்து சாக முடியவில்லை
எங்களால்

இரத்தம்கொட்டி
மண்ணில் சாய்ந்து கிடந்த
உன்முகம் பார்த்து
துண்டிக்கப்பட்டுக் கிடக்கிறோம்
நாங்கள்

ரேசன்கடை தராசுத்தட்டு
ஒருபக்கம் சாயக்கூடாதென்று
சொன்னதற்காக இன்று
ரோட்டில் சாய்ந்து கிடக்கிறாய்!

தண்ணீருக்கு காசுகேட்டதை
தட்டிக் கேட்டதற்காக
இன்று வீதியில் ஓடுகிறது
உன் இரத்தம்

வாய்ச்சொல் வீரர்களுக்கு
மத்தியில் வளர்ந்த
வில்லாபுரத்தின் வீரத்தாய் நீ

ரெளடிகளுக்கு எல்லோரும்
காசு கொடுத்த பொழுது-நீதான்
கசையடி கொடுத்தாய்

சமூக விரோதிகளுக்கு
கட்டுப்பட முடியாதென
கர்ஜித்தாய்!

மக்களை நேசித்த
மகத்தான
கம்யூனிஸ்ட் நீ !

கூலிப்படையால் வெட்டப்பட்ட
சே குவேராவின் கைகளும்

கைக்கூலிகளால் வெட்டப்பட்ட
உன் கை விரல்களும்
என்றும் எங்களைத்
தழுவி நிற்கும்

1 Comment
  1. ரஞ்சித் குமார் says

    அருமையான வரிகள்

Leave A Reply

Your email address will not be published.