அடையாளம் காணப்பட்ட எம்.ஜி.ஆர்.
ஜுபிடர் பிலிம்ஸ் தயாரித்த அரசிளங்குமாரி. இந்த படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். கருணாநிதி காம்பினேஷன். கிட்டத்தட்ட இந்த படம் நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். புதியபடம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்தார்.
அதுதான் நாடோடி மன்னன். தனது சிறுவயது பாதிப்பான IF I WERE A KING (நான் மன்னனானால்) இப்படத்தின் கதைக்கு தமிழ்நாட்டு வாசனை திரவியங்களை தெளித்து புதிதாக ஒன்றை தயார் செய்தார். படத்திற்கு இரண்டு வசனகர்த்தாகள். ஒன்று கண்ணதாசன் மற்றொருவர் ரவீந்திரன். நாட்டின் மன்னன் ஒருவர். நாடோடி மற்றொருவர்.
இருவருக்கும் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை. அதன்காரணமாகவே நாட்டை ஆளும் வாய்ப்பு நாடோடிக்கு கிடைத்தது. அவர் எப்படி மன்னனாக மாறுகிறான். எப்படி எல்லாம் ஆட்சி செய்ய விரும்புகிறான் என்பதுதான் கதை. படத்தில் எம்.ஜி.ஆர். பேசிய வசனமே பிற்காலத்தில் இவரது ஆட்சியில் வந்த மக்கள் நலத்திட்டங்களை பிரதிபலித்தன.
நாடோடி மன்னன் பிரமாண்டமான வெற்றி. மதுரை முத்து தலைமையில் வெற்றிவிழா. சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தது. 1959 சிவாஜிகணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மனின் வெற்றி எம்.ஜி.ஆரை பலவாறாக யோசிக்க வைத்தது. கண்ணதாசனை வைத்து ஊமையன் கோட்டை என்னும் திரைப்படத்தை கதை வசனமாக எடுக்க முடிவாயிற்று. சிவாஜிகணேசனின் திருமண விழாவில் பந்தி நடந்து கொண்டிருந்த போது வந்தவர்களை நலம் விசாரிக்க கல்யாண மாப்பிள்ளையான சிவாஜி வந்தார். எல்லோருக்கும் வணக்கம் சொன்ன சிவாஜி. எம்.ஜி.ஆரை பார்த்து உற்சாக மிகுதியால் ஒரு கேள்வியை கேட்டு வைத்தார்.
அண்ணே! நீங்க கத்தியை எடுத்தா அதை கை தட்டி ரசிக்க மக்கள் இருக்கிறபோது, சூட்டு கோட்டெல்லாம் போட்டுக்கிட்டு ஏண்ணே நடிக்கிறீங்க? தன்னை சிவாஜி அவமதிக்கிறார் என்று நினைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர். ஐந்தாண்டு திட்டமொன்றை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். நினைத்தை சாதித்தார். சிவாஜியை வைத்து வெற்றிப்படங்களை தந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, பி.ஆர்.பந்துலு, டி.ஆர்.ராமண்ணா போன்றவர்களை தன் பக்கம் இழுத்தார்.
அதன்மூலம் வந்த விளைவே பணத்தோட்டம், படகோட்டி, சந்திரோதயம், கலங்கரை விளக்கம், ஆயிரத்தில் ஒருவன், தேடிவந்த மாப்பிள்ளை, ரகசிய போலீஸ் 115, பறக்கும் பாவை போன்ற வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக்கினார். தமிழ்நாட்டில் தேர்தல் வாடை அடிக்கத்தொடங்கிய 1962 பொதுத்தேர்தலில் போட்டியிட திமுக தயாராகிக்கொண்டிருந்தது. பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் எம்.ஜி.ஆருக்கு அதிகமாக இருந்தது. அப்போது அவருக்கு இருந்த ஒரே தடை அவரது மனைவியான சதானந்தவதியின் மோசமான உடல்நிலைதான். ஆனாலும் திட்டத்தில் மாற்றமில்லை என தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார்.
வழியில் எம்.ஜி.ஆருக்கு ஒரு தகவல் வந்தது. கொள்ளைக்காரன் மம்பட்டியானை வைத்து உங்களை கொல்ல திட்டம் தீட்டப்பட்ட தகவலே. எச்சரிக்கையாக இருக்கக்கோரி தகவல்களை தந்த திமுக தொண்டர்கள். முடிந்தால் கொல்லட்டும் என்று எம்.ஜி.ஆர். தேனி சென்றார்.
அங்கிருந்து சேலம் சென்று எஸ்எஸ்ஆருக்கும், தஞ்சை சென்று கருணாநிதிக்கும் தீவிர பிரச்சாரம் செய்தார். இடைப்பட்ட சமயத்தில் மனைவி சதானந்;தவதி அபத்தான நிலையில் உள்ளார் என்பது தெரிந்தாலும், பேரறிஞர் அண்ணாவிற்காக காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்தார். பம்பரமாக சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் எம்.ஜி.ஆர். என்ற செய்தி அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. தேர்தல் முடிவுகள் திமுகவின் சக்தியை உயர்த்தியது.
கடந்த தேர்தலில் 15 இடங்களை பெற்ற திமுக இந்த முறை 50 இடங்களை பெற்று வெற்றியை கொண்டாடியது. ஆனால் வெற்றிக்கொண்டாட்டத்தில் எம்.ஜி.ஆர். பங்கேற்க முடியவில்லை.வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். மனைவி சதானந்தவதி மரணமடைந்தார்.
கழகத்தில் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். காட்டிய அக்கறை, செலுத்திய ஆர்வம், உழைத்த உழைப்பு, எல்லாவற்றையும் மனதில் குறித்துக்கொண்டார் பேரறிஞர் அண்ணா. திமுகவின் எதிர்கால பிரச்சார பீரங்கி என்று திமுக தலைவர்களும் எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டது அதற்கு பிறகுதான்.