MGR – ஆபரேஷன் நக்சலைட் !
MGR – ஆபரேஷன் நக்சலைட் !
தனித்தெலுங்கானா என்ற கோரிக்கையை முன் வைத்து ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துக்கொண்டிருந்தனர் நக்சலைட்டுகள்.
அந்த இயக்கங்களைப் போலவே நாட்டின் பல பகுதிகளில் நக்சல்பாரி இயக்கங்கள் உருவாகி முக்கியமாக மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அவர்களது செல்வாக்கு மிக அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட அதே சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் வடஆற்காடு, தர்மபுரி, மாவட்டங்களில் சில குழுக்கள் செயல்படத் தொடங்கின.
காவல்நிலையங்களுக்கு தீ வைப்பதும், வெடிகுண்டு வீசுவதும் போன்ற காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவைகளையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைத்தார். அந்த வேகத்தை தீவிரப்படுத்தும் வகையில் திருப்பத்தூரில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. விசாரணைக்காக ஒருவரை திருப்பத்தூர் காவலர்கள் ஜீப்பில் அழைத்து வந்தனர்.
திடீரென இடுப்பில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார் அந்த நபர். மறுநொடி ஜீப்பில் இருந்த அத்தனைபேரும் கொல்லப்பட்டு, ஜீப் உருத்தெரியாமல் அழிந்தது. உடனடியாக தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஆலோசனையில் இறங்கினார். கடந்த காலங்களில் நக்சல்வாதிகள் நடத்திய அத்தனை தாக்குதல்களையும், அவர்களைப்பற்றிய தகவல்களையும் அவரது கவனத்திற்கு கொண்டு போகப்பட்டது. ஒடுக்க வேண்டும். உடனடியாக அத்தனைபேரையும் ஒடுக்க வேண்டும் என்று அதற்கு “ஆப்ரேஷன் நக்சலைட்” என்று பெயரிட்டு அந்த பொறுப்பை இரண்டு முக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்
எம்.ஜி.ஆர். ஒருவர் மோகன்தாஸ், மற்றொருவர் தேவாரம். இருவரும் இரவு பகலாக தேடுதல் வேட்டையை தொடங்கினர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேற்பட்டு துப்பாக்கி தோட்டாக்கள் பறந்து கொண்டிருந்தன. கைதுகள் நிற்கவே இல்லை. நக்சலைட்டுகள் துவளும் வரை தாக்குதல்கள் தொடர்ந்தன. அதன்பிறகே ஓரளவிற்கு செய்திகள் வரத்தொடங்கின.
மனித உரிமை இயக்கங்கள் குரல் எழுப்பத் தொடங்கின. தமிழ்நாடு காவல்துறை எல்லை மீறி நடந்துகொள்கிறது. வன்முறையை கையாள்கிறது. மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்று ஆளுக்கு ஆள் விமர்சனம் செய்தனர். ஆனாலும் காவல்துறையின் கடுமையான நடவடிக்கை நிறுத்தப்படவே இல்லை. தொடர்ந்து 20 நாட்களில் நக்சலைட்டுகள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு அறிவித்தது, காவல்துறையினருக்கு அளவுக்குமீறிய சுதந்திரம் எம்.ஜி.ஆர் வழங்கிவிட்டார்.
காவல்துறையினரின் அத்துமீறலை துளியும் கண்டுகொள்ளவில்லை என்று எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனங்கள் எழுந்தாலும் அதனைப்பற்றி அவர் துளியும் கவலைப்படாமல், எந்த நக்சலைட்டுகளையும் கொல்ல வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கைது செய்யவரும் போலீசாரை சுடுவதையும் அதுவும் வெளிநாட்டு துப்பாக்கிகளை நக்சல்கள் கையாளும் போது, அதனை ஏற்றுக்கொள்வதா? இல்லை பார்த்துக்கொண்டுதான் சும்மா இருப்பதா? எனக்கு சட்டம் ஒழுங்குதான் முக்கியம் என்று கறாராக சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.
நக்சலைட்டுகள் இன்று பல மாநிலங்களில் வளர்ந்துவிட்டபோதிலும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வேரூன்ற முடியவில்லை என்றால் அதற்கு எம்.ஜி.ஆர் ஊற்றிய வெந்நீர்தான் காரணம் என்கின்றனர் எம்.ஜி.ஆர் காலத்து காவல்துறை அதிகாரிகள்.
-ஹரிகிருஷ்ணன்