தமிழ் படித்தவன் குறைந்தவன் அல்ல…

0

தமிழ் படித்தவன் குறைந்தவன் அல்ல…

 

திருச்சியில் “களம்” இலக்கிய அமைப்பு, கடந்த பதினெட்டு ஆண்டுகளாக கலை, இலக்கிய நிகழ்வுகளை தொய்வின்றி சிறப்பாக நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக சமீபத்தில், ஒரிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். எழுதிய “தமிழ் நெடுஞ்சாலை” எனும் நூலின் அறிமுக விழாவினைச் திருச்சியில் நிகழ்த்தியது களம் இலக்கிய அமைப்பு.

மதுரை பாராளுமன்ற உறுப்பினரும், வேள்பாரி படைப்பாளியுமான சு.வெங்கடேசன், மத்திய மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவில் களம் அமைப்பின் அமைப் பாளர் துளசிதாசன் வரவேற்புரையாற்றினார். சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேனிலைப்பள்ளி செயலாளர் சத்தியமூர்த்தி, “தமிழ் நெடுஞ்சாலை” நூலினை வெளியிட்டார். விழாவில் பல்வேறு துறை சார்ந்தவர்களும் “தமிழ் நெடுஞ்சாலை” நூலினை அறிமுகம் செய்து பேசினர்.

தமிழ்நாடு பாடநூல் கழக ஆலோசகர் சங்கர சரவணன் :


“ஒரு காலகட்டத் தில் பத்தாண்டுகளாக பாலா (ஆர். பாலகிருஷ்ணன்) சாருடன் அவருடைய நெடுஞ்சாலையில் இணைந்து பயணித்தவன் நான். அந்த வகையில் பத்து காரணங்களுக்காக நான் அவரைப் பாராட்டியே தீருவேன். அகில இந்திய அளவில் ஐஏஎஸ் தேர்வினை விருப்பம் உள்ளவர்கள் அவரவர் தாய்மொழியில் (பிராந்திய) எழுதலாம் என்று 1978ல் சட்டம் அமுலுக்கு வந்தது. கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்று தேர்ச்சி பெற்ற பாலா அவர்கள், 1984ல் ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். மேலும் தமிழ் இலக்கியம் படித்து முதன்முதலாக ஐஏஎஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களில் முதன்மையானவர் பாலா அவர்கள்”.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி :


“இந்நூலினை எழுதியுள்ள பாலா அவர்கள் மாபெரும் ஆளுமை. இந்நூலின் நாற்பது அத்தியாயங்களில் அவரது கவிதையுள்ளம் நம்மை விரல் பிடித்து அழைத்துச் செல்கிறது. மணாலி நீர்வீழ்ச்சி. அதனை ரசித்துப் பார்க்கிறார். அங்கு இரண்டு பாறைகளின் இடுக்குகள் இடையே ஓரிடத்தில் ஒரு மிகச் சிறிய தீப்பெட்டி. அந்தத் தீப்பெட்டியைப் பார்த்த பாலாவிற்கு, ஒருவேளை அது சிவகாசி தீப்பெட்டியோ என்கிற எண்ணம் வருகிறது. சிரமப்பட்டு அந்தப் பாறை இடுக்குகளுக்கு மிக அருகே சென்று அந்தத் தீப்பெட்டியினை எடுத்துப் பார்க்கிறார். அந்தத் தீப்பெட்டியில் கோவில்பட்டி என்று உள்ளது. அவரது கவிதையுள்ளம் அப்போதே துள்ளிக் குதித்துள்ளது. அதுபோல நம்முடைய சக மனிதர்களை நேசிப்பதிலும் பாலா அவர்கள் முதன்மையாகத் தெரிகிறார்.

குஜராத் ஸ்டேன்ஸ் பாதிரியார் இவருக்கு நெருங்கிய நண்பர். குஜராத்தில் ஸ்டேன்ஸ் பாதிரியாரும் இரண்டு குழந்தைகளும் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்படுகின்றனர். அந்த நிகழ்வினை இந்த நூலில் ஒரு அத்தியாயத்தில் எழுதி உள்ளார். அதனை வாசித்த பின்னர் நான் அழுது விட்டேன்.”

திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் :


“பாலா அவர்களின் பள்ளி ஆசிரியர் புலவர் சோமநாதன் இங்கு வந்திருக்கிறார். இந்த நூலில் ஓரிடத்தில் “என்னை எனக்கே கண்டுபிடித்துத் தந்தவர் என் ஆசிரியர் புலவர் சோமநாதன்” என்று பாலா குறிப்பிட்டுள்ளார். அவரிடம் தமிழ் பயின்று பின்பு கல்லூரியிலும் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்துத் தேர்ச்சி பெற்றவர் பாலா அவர்கள். வடஇந்திய மாநிலங்களில் இந்திய ஆட்சிப் பணியில் பலப்பல உயர்பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

வட இந்தியாவின் மலைப் பிரதேச கிராமம் நகாடோ. சப்கலெக்டராக 1986ல் அந்த கிராமத்தில் பழங்குடியின மக்களை நேரில் சென்று சந்திக்கிறார். சுதந்திரம் பெற்ற பின்னர் தங்கள் ஊருக்கு நேரில் வந்திருக்கும் அரசு அதிகாரி என்று பாலாவை அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஏன் தெரியுமா? சாலை வசதி, வாகன வசதி எதுவும் கிடையாது. அந்த ஊருக்கு. மேடு பள்ளம் காடு மலை என்று தொடர்ந்து பத்து மணி நேரம் நடந்தே சென்று அந்த கிராம மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிகிறார். அதன் பின்னர் 32 ஆண்டுகள் கழித்து 2018ல் அவரைப் பார்த்தவுடன் அந்த ஊர் மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். தமிழ் நெடுஞ்சாலையின் வெற்றியும் மகத்துவமும் அது தான்”.

தமிழக முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் :


“தமிழ் படித்தால் வாழ்வில் என்ன கிடைக்கும் என்பவர்களுக்கு, எங்கள் பாலா அவர்கள் எழுதியுள்ள ‘தமிழ் நெடுஞ்சாலை’ நூலினைத் தாராளமாக அன்பளிப்பாக வழங்கலாம். முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்துத் தமிழில் ஐஏஎஸ் தேர்வெழுதி இந்திய ஆட்சிப் பணிகளில் அமர்ந்த முதல் தமிழர் ஆர். பாலகிருஷ்ணன். மதுரை மாவட்டம் நத்தம் எனும் ஊரில் பிறந்தவர். சங்க இலக்கியம் முதல் ஹைக்கூ எனப்படும் குறுங்கவிதை முதல் தோய்ந்தவர். ஐஏஎஸ் தேர்வு எழுதிய காலங்களில் அவர், தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

ஒரு நாள் நள்ளிரவு. ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் டெல்லியில் வெளியிடப்படுகிறது. டெலிபிரிண்டரில் தினமணி ஆபீஸ்க்கு அந்தச் செய்தி வருகிறது. முதன்முதலாக ஐஏஎஸ் தேர்வினை ஆர்.பாலகிருஷ்ணன் என்பவர் பிராந்திய மொழியான தமிழில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் என்கிற தகவல் டெலிபிரிண்டரில் பதிவாகிறது. அதனை முதன்முதலாக அந்தச் செய்திக்கு உரிய நபரான பாலாவே, வாசித்துப் பார்க்கிறார். பின்னர் அவரே அந்தச் செய்தியினை தினமணி நாளிதழ் அச்சுக்கு அனுப்புகிறார்.


வாழ்வில் இந்த ஒரு நிகழ்வு மட்டுமே மற்ற எவருக்குமே நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை. கவித்துவ நடையுடன் ‘தமிழ் நெடுஞ்சாலை’ நூலினை எழுதியுள்ளார். இந்த நூலினை வாசித்த வகையில் எனக்கும் பாலா அவர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

ஐஏஎஸ் தேர்வுக்கு முதல் நாள் ஒரு நாடகத்தில் நடிக்கப் போய் வருகிறார் பாலா அவர்கள். நான் ஐஏஎஸ் தேர்வு எழுதும் முதல் நாள் சென்னை ரோகிணி தியேட்டரில் ஒரு சினிமா பார்க்கப் போய்ட்டு வந்தேன்.” என்று சுவையாக உரையாற்றினார்.
‘களம்’ அமைப்பின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான நந்தலாலா, அமெரிக்காவில் இருந்தபடி வலைத்தள வசதி வாயிலாக வண்ணத்திரையில் சிற்றுரையாற்றினார்.

இளைஞர் நெல்சன் நன்றி கூற, இறுதியில் ஏற்புரை ஆற்றினார் ஒரிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் :


“தமிழ் படித்திருக்கிறோம். நம்மாலும் வடமாநிலங்களில் பணியாற்றிட முடியும் என்கிற தார்மீக கோபம் என்னை உந்தித் தள்ளியது. அதன் வெளிப்பாடாகவே இந்திய ஆட்சிப் பணிக்கென வடஇந்திய மாநிலங்களைத் தேர்வு செய்தேன்.

இந்தியாவில் எங்கு சென்று நின்றாலும், உலகம் முழுவதும் சுற்றினாலும் எனக்கு தமிழ்மண் தான் நினைவில் நிற்கும். தமிழ் படித்தவன், வேறு யாரையும் விட எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல. எனது வாழ்வும் எனது இந்த புத்தகமும் உங்களுக்கு உணர்த்துகின்ற உயரிய கருத்து இது” என்றார். நடக்க நடக்க நீள்கிறது ‘தமிழ் நெடுஞ்சாலை’. அட்ச ரேகைகளும் தீர்க்க ரேகைகளும் கற்பனைக் கோடுகள். யாதும் ஊரே. யாவரும் கேளிர்.” என்று இந்தத் தமிழ் நெடுஞ்சாலை நம் எல்லோருக்குமானது.

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.