‘வாய்தா’வை வதம் செய்த தியேட்டர் ஓனர்கள்!
‘வாய்தா’வை வதம் செய்த தியேட்டர் ஓனர்கள்!
விஜய்மல்லையா, நீரவ்மோடி, மொகுல்சோக்ஷி போன்ற கார்ப்பரேட் கிரிமினல்கள் நமது நாட்டு வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்துவிட்டு, வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கொள்ளையர்களை பிடித்துக் கொண்டுவர துப்பில்லாமல் இருக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ஏனெனில் சட்டத்தையும் நீதியையும் (அது லண்டனாக இருந்தாலும் அமெரிக்காவாக இருந்தாலும் இதே லட்சணம் தான் ) தங்களுக்குச் சாதமாக வளைப்பதில் அசகாய சூரர்களாக இருக்கிறார்கள் அந்த வங்கிக் கொள்ளையர்கள்.
உலகில் எந்த நாட்டு சட்டமாக இருந்தாலும் எளியோர்களுக்கும் வரியோரிகளுக்கும் நீதி அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் நீதியே கிடைப்பதில்லை. இதைக் கதைக்களமாகக் கொண்டு தான் ‘வாய்தா’ என்ற மிகச்சிறந்த படம் தயாரித்திருந்தார் வினோத்குமார் என்பவர். மகிவர்மன் என்ற சிவப்புச் சிந்தனையாளர் தான் படத்தின் டைரக்டர். இந்திய கம்யூனிஸ்ட் கட்டியின் மூத்த தலைவர் தோழர் சி.மகேந்திரனின் மகன் புகழ் தான் ‘வாய்தா’வின் ஹீரோ என்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், வி.சி.க தலைவர் திருமாவளவன் உட்பட அரசியல் பிரபலங்கள் பலரும் ‘வாய்தா’வை பார்த்து மனதாரப் பாராட்டினார்கள். மே.6-ஆம் தேதி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, 4-ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு ‘வாய்தா’ காண்பிக்கப்பட்டது. ஒட்டு மொத்த மீடியா ரிப்போர்ட்டர்களும் ‘வாய்தா’வைப் பாராட்டினார்கள். இந்த நிலையில் தான் 05-ஆம் தேதி மதியம் ‘வாய்தா’படத்தின் பி.ஆர்.ஓ.யுவராஜிடமிருந்து மீடியா ரிப்போர்ட்டர்ஸ்க்கு ஒரு வாட்ஸ்-அப் மெசேஜ் வந்தது. “வாய்தா’ படத்திற்கு போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதன் பின் தங்களின் மேலான விமர்சனத்தை வெளியிட்டால் போதும்” என்பது தான் அந்த மெசேஜ்.
”பல கோடிகளில் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணி நட்டமாகி, தெருக்கோடியில் நிற்போமே தவிர, இந்த மாதிரி நல்ல, சிறந்த படங்களையெல்லாம் வதம் பண்ணுவோமே தவிர வாங்கி ரிலீஸ் பண்ண மாட்டோம்” என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் தியேட்டர் ஓனர்கள். அதே மே.6-ஆம் தேதி ரிலீசாகியிருக்க வேண்டிய ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ படத்திற்கும் இதே கதிதான் ஏற்பட்டது. நல்லா இருக்குய்யா ஒங்க பிஸ்னஸ் பாலிஸி.