இதுதாண்டா ஜர்னலிஸம் தொடர் – 3!
முகநூலில் நான் பகிரும் பல தகவல்கள் அன்றைய செய்தித்தாள்களில் வருபவைதான். தினமும் நான் 3 செய்தித்தாள்களைப் படிக்கிறேன். தி இந்து, பிஸினஸ் லைன், டைம்ஸ் ஆப் இண்டியா என குறைந்தது ஒரு மணி நேரம் அதற்காக செலவிடுகிறேன். மெயின்ஸ்ட்ரீம் மீடியா, குறிப்பாக அச்சு ஊடகம், வெளியிடும் தகவல்கள் 90% ஆதாரங்களுடன் வருவதால் நம்பகத்தன்மை மிக அதிகம். மேலும் செய்தித்தாள்களின் 14–&16 பக்கங்களில் நாட்டு (உலக) நடப்புகள் குறித்த ஒரு பருந்துப் பார்வை கிடைக்கிறது. இது படிப்பவரின் சிந்தனையில் ஒரு கண்ணோட்டத்தை உருவாக்குகிறது. விமர்சனப் பார்வையைக் கூராக்குகிறது.
செய்தித்தாள்களின் மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் அவற்றின் நேர்மறை விளைவுகள் அதிகம். செய்தித்தாள்களைப் படிக்கும் வழக்கம் குறைந்து வருவதற்குக் காரணம் ஸ்மார்ட் போன்கள் உடனுக்குடன் தகவல்களைக் கொடுப்பதுதான். அதனையே முக்கிய தகவல் ஆதாரமாக பார்ப்பவர் பலர். இன்று செய்தி கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் கண் பார்வையற்றவகள் உணர்ந்த யானை போல் முழுமையான பார்வையை அவை கொடுப்பதில்லை.
விமர்சன பூர்வமாக தகவல்களை உள் வாங்கும் திறனும் பொறுமையும் நேரமும் இல்லாத இந்த வெற்றிடத்தைத்தான் சில யூடியூப் சூரர்கள் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்பும், கேளிக்கையும் சேர்ந்த பொய்களைப் பேசி பணம் குவிக்கின்றனர். எவ்வித தார்மீக நெறிகளுக்கும் கட்டுப்படாமல் சமூகப் பொறுப்பற்று திரிகிறார்கள். போலி செய்திகள் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது.
இதில் வருத்தத்திற்குரிய விஷயம் சமூக செயல்பாட்டாளர்களும், அரசியல் கட்சிகளின் ஊடக நிர்வாகிகளும் கூட, நேர்மையான ஊடகவியலாளர்களும் கூட நம்பகத் தன்மை மிகுந்த செய்தித்தாள்கள், இணைய ஊடகங்களை பார்ப்பதும் படிப்பதும் இல்லை. இவர்களே என் பதிவுகளைப் பாராட்டும் போது சிரிப்புத்தான் வரும்.
நான் தி இந்து பத்திரிக்கையில் 34 ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தபோது நியூஸ் எடிட்டர் கே.நாராயணன் கூறிய அறிவுரை: ஒரு நல்ல ஜர்னலிஸ்டாக விரும்பினால் நீ தினமும் படிக்க வேண்டியவை:
1. நீ பணியாற்றும் செய்தித்தாள் (இதையே பலரும் இன்றும் செய்வதில்லை).
2. போட்டி செய்தித்தாள்.
3. வணிகம், பொருளாதாரம் சார்ந்த செய்தித்தாள்.
4. சர்வதேச பத்திரிக்கை.
5. தமிழ் (ஒருவர் வாழும் மாநிலத்தின் மொழியில் வெளியாகும்) பத்திரிக்கை. இது மலைப்பாக இருந்தாலும் இவற்றை படிக்கும் முயற்சியே எங்களை பட்டை தீட்டியது.
அது ஒரு கனாக் காலம்.
– விஜயசங்கர் ராமச்சந்திரன்
முந்தைய தொடரை வாசிக்க…