பக்கவாத நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளும் வாழ்வியல் முறைகளில், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம். அதில் 8 மணி நேரத்தை உறக்கத்திற்காக விட்டுவிடுவோம். மீதமுள்ள 16 மணி நேரத்தில் நாம் ஓடுகிறோம்…ஓடுகிறோம்…ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
அப்படி எதை நோக்கி ஓடுகிறோம்?
பணம், புகழ், பாராட்டு, குடும்பத்தின் எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு என ஒவ்வொருவருக்கும் ஓட்டத்தின் தேடல் வேறுபடுகிறது.
நம் மனது நினைக்கும் அத்தனை வேலைகளையும் நம் உடல் கொண்டே செய்கிறோம். நமது உடலை நாம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது கவனித்துக் கொண்டோமேயானால், நமது உடலானது நம்மை மீதமுள்ள 23 மணி நேரமும் வியாதிகளில் இருந்து பாதுகாத்து, ஆரோக்கியமான வாழ்வு வாழ வழிவகுக்கும்.
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து நாம் நம் உடலை பாதுகாக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியை மூன்று விதமாகப் பிரித்து செய்யலாம்.
- உடலைப் பாதுகாப்பதற்கான பயிற்சி
- பிராணனைப் பாதுகாப்பதற்கான பயிற்சி
- மனதைப் பாதுகாப்பதற்கான பயிற்சி
முதலில் உடலைப் பாதுகாப்பதற்காண வழிமுறைகளைப் பார்ப்போம்.
நடைப்பயிற்சி என்றவுடன் அனைவரின் மனதிலும் வருவது என்ன? காலையில் கூட்டம் கூட்டமாக நண்பர்களுடன் பல்வேறு கதைகளை பேசி, சிரித்துக் கொண்டு 30 நிமிடங்கள் நடந்துவிட்டு, தெருமுனையில் உள்ள கடைக்குச் சென்று தேனீரோ அல்லது சூடான வடையையோ சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவது என்பதா?… இதற்குப் பெயர் நடைப்பயிற்சியே அல்ல.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
நாம் நடக்கும்போது நமது எண்ணங்கள் அனைத்தும் நம் உடல் மீது இருக்க வேண்டும். உடலே!…நான் உன்னை பாதுகாப்பதற்காக இந்த 30 நிமிடங்களை செலவிடுகிறேன். நான் நடக்கும் போது எனது நுரையீரல் உள்ளே தூய்மையான காற்று சென்று வருகிறது. என் இதயம் சீராக துடிக்கிறது. எனது கால்கள் நல்ல பலத்தைப் பெறுகிறது. எனது மூளையில் மகிழ்ச்சிக்காண நொதிகள் சுரந்து எனது இன்றைய தினம் மிகவும் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கப் போகிறது. இந்த பிரபஞ்சத்தின் சக்தி என்னுள்ளே பரவி எனது ஒவ்வொரு அணுக்களையும் மிகவும் துடிப்புடன் இயங்கச் செய்கிறது என்ற எண்ணத்துடனும், முழுக்கவனத்துடனும் நடந்தோம் என்றால் தான் நடைப்பயிற்சியின் முழு பலனையும் நாம் பெற முடியும்.
இவ்வாறு முழுக் கவனத்துடன் நடைப்பயிற்சி மேற்கொள்வதால்
உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது, நன்கு பசி எடுப்பது, நமது நாளமில்லா சுரப்பிகளை நன்கு வேலை செய்ய வைப்பது, பக்கவாத நோய், மாரடைப்பு நோய், இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுப்பது, நமது எலும்புகள் வலுப்பெருவது, மனச்சோர்வு ஏற்படாமல் தடுத்து நமது தன்னம்பிக்கையை அதிகரிப்பது, குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது இவ்வாறு பல நன்மைகளை தருகிறது இந்த நடைப்பயிற்சி. இப்படிப்பட்ட நடைப்பயிற்சியை மேற்கொள்வதற்கு காசோ, பணமோ தேவையில்லை. நாம் மனது வைத்தால் மட்டும் போதும்.