பல்கேரிய கப்பலும் எம்.ஜி.ஆரும் 🧐😳🔥

Bulgarian ship

0

 

பல்கேரிய கப்பலும் எம்.ஜி.ஆரும்

🧐😳🔥

1979-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்புச்செய்தியாக இருந்தது பல்கேரியா நாட்டின் கப்பல் மற்றும் அது தொடர்பான சர்ச்சைகளும் தான். அந்த சர்ச்சையும் எம்.ஜி.ஆரை குற்றம் சொல்லியே வந்தது. செப்டம்பர் 27, 1979 சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர் அரசின் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த தீர்மானத்தின் மீது நவம்பர் 3, 1979 அன்று பேசிய கலைஞர் பல்கேரிய நாட்டிலிருந்து கப்பல் வாங்குவதற்கு 4 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அதில் 1 கோடி ரூபாய் முன்பணமாக எம்.ஜி.ஆர் வாங்கியதாக குற்றம் சாட்டினார். மேலும் இது சம்பந்தமாக எழுத்துப்பூர்வமான ஆதாரங்களையும், கடிதங்களையும் எடுத்து வைத்தார். அவற்றின் நகல்கள் அவையில் இருந்தவர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் தரப்பட்டது.

மறுநாள் சட்டமன்றத்தில் பதிலளித்த எம்.ஜி.ஆர் எவ்வளவு பலவீனமான அரசு எந்திரத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறோம் என்பதற்கு எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி சொன்ன குற்றசாட்டுகளே சான்று. உடனே எழுந்த கருணாநிதி கப்பல் பேர ஊழல் சம்மந்தமாக உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரிக்க அரசு தயாரா என்று கேள்வி எழுப்பினார். எம்.ஜி.ஆரும் உடனே சம்மதித்தார்.

கருணாநிதி அடிக்கடி நீதி விசாரணை பற்றி கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தாலும் அப்படி ஒரு விசாரணை எதுவுமே நடைபெறவில்லை. டிசம்பர் 29,1979 தன்னுடைய மன்றம் இதழில் “ஊழல் கண்ணன் கண்டுபிடித்த ஊழல்” என்ற தலைப்பில் நாவலர் நெடுஞ்செழியன் பதில் எழுதினார்.

அதாவது கலைஞர் நம்பி இருக்கும் அரசியல் நடவடிக்கை புரட்சித்தலைவர் அவர்களின் மீது பல்கேரியா கப்பல்பேர ஊழல் என்ற கற்பனை குற்றச்சாட்டை சுமத்துவது என்பதுதான். பல பொய்யான அடிப்படை ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டே இருப்பது கலைஞரின் வழக்கமாகிவிட்டது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து வாரியத்திற்கு பல்கேரியா நாட்டில் கப்பல் வாங்குவதற்கு முயற்சி செய்யப்பட்டு அதற்கு 4 கோடி ரூபாய் லஞ்சம் பேசப்பட்டு ஒரு கோடி ரூபாயை முன்பணமாக எம்.ஜி.ஆர் பெற்றுக்கொண்டார் என்பதே கலைஞரின் குற்றச்சாட்டு.
அதன்படி நீதி விசாரணைக்கு தலைமை நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு ஏற்பாடு செய்யுமாறு இந்தியாவின் பிரதமர் சரண்சிங் அவர்களுக்கு புரட்சித்தலைவர் கடிதமே எழுதிவிட்டார். இதற்கிடையில் நீதிவிசாரணை எங்கே? எங்கே? என்று கலைஞர் அவர்கள் நாள்தோறும் புரட்சித்தலைவரை கேட்டுக்கொண்டே இருந்தார்.

கலைஞர் அவசரப்பட்டால், அவருக்கு அக்கறை இருந்தால் அவர் இந்திய பிரதமரை அணுகி, விரைவில் விசாரணைக்கு ஏற்பாடு செய்யும்படி வற்புறுத்தலாம்.
அதை விட்டுவிட்டு கலைஞர் அவர்கள் முச்சந்திக்கு முச்சந்தி நின்று நீதிவிசாரணை எங்கே? எங்கே என்று அலறி கூக்குரல் இட்டுக்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மை நிலை என்னவென்றால் பல்கேரியா நாட்டுடன் கப்பல் வாங்குவதற்கான உடன்படிக்கையே நிறைவேறவில்லை. கப்பலே இன்னும் வாங்கப்படவில்லை. உடன்படிக்கையே ஏற்படாத நிலையில் வாங்கப்படாத ஒரு கப்பலுக்காக யார் 1 கோடி ரூபாய் லஞ்ச முன்பணம் தருவார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் ஒரு சமதர்ம நாட்டில் எப்படி? புரட்சித்தலைவர் ரூ.4 கோடி பேரம் பேசி ரூ.1 கோடி லஞ்சம் வாங்க முடியும்? கொடுக்கப்பட்ட லஞ்சப்பணத்தை ஒரு சமதர்ம நாடு எந்த கணக்கில் கொடுக்கும். அதை எந்தக்கணக்கில் எழுதி வைக்கும்? சமதர்ம நாட்டில் ஒருவன் லஞ்சம் கொடுத்தான் என்றோ, அல்லது லஞ்சம் வாங்கினான் என்றோ தெரிந்தால் உடனே “அந்த நாட்டின் அரசு அவனை சுட்டுத்தள்ளிவிடும்” என்பது உலகறிந்த உண்மை.

ஒப்புக்காக பல்கேரியா நாட்டு கப்பல் பேரத்தில் புரட்சித்தலைவர் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். அந்தப்பணம் பல்கேரியநாட்டு டாலராகத்தானே இருக்க முடியும். அந்த டாலர்களை ரூபாயாக மாற்றாமல் இந்தியாவில் செலாவணி ஆக்க முடியாது.

ரூபாயாக மாற்ற வேண்டுமென்றால் அந்நிய செலாவணி வங்கி ஒன்றில் தான் மாற்றமுடியும். அப்படி மாற்றும் போது, டாலர் வந்தவிதம், மாற்றியவர்களின் முகவரி முதலியவற்றை குறித்துக்கொண்டுதான், வங்கி ரூபாயாக தரும். வங்கியின் ஏட்டில் முழுவிவரமும் பதிவாகும்போது அந்த லஞ்சப்பணத்தை எப்படி புரட்சித்தலைவர் எவருக்கும் தெரியாமல் மறைக்க முடியும். கப்பல் பேர ஊழல் தொடர்பாக பத்திரிக்கையில் எழுதிய கலைஞர், மற்றும் அதனை வெளியிட்ட முரசொலிமாறன் ஆகியோர் மீது எம்.ஜி.ஆர். மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அந்த பத்திரிக்கையில் பதிவு செய்துள்ளார் நெடுஞ்செழியன். அதன்பிறகு பல்கேரியாவிடம் கப்பல் வாங்கும் முயற்சியே நிறுத்தப்பட்டு விட்டது.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலை எந்தக்கட்சியுடன் இணைந்து சந்திப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் அதற்குள் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஒன்று அரங்கேறியது.

நேற்றுவரை சண்டைக்கோழிகளாக திரிந்துகொண்டு இருந்த திமுகவும், காங்கிரசும் திடீரென கூட்டணி அமைத்துக்கொண்டன. அதிர்ச்சியாக இருந்தது எம்.ஜி.ஆருக்கு. எப்படி நடந்தது? இந்த அதிசயம்? நெருக்கடி என்றார்கள், நெருப்பாறு என்றார்கள், ஆட்சியை கலைத்துவிட்டார்கள் என்று அலறினார்கள், முகத்துக்கு நேரே கறுப்புக்கொடி காட்டினார்கள். திடீரென கைகுலுக்கிக்கொண்டார்களே.(காங்கிரசும், திமுகவும் தான்) எல்லாம் நாம் தவறு செய்ததால்த்தான். ஏன்தான்? சரண்சிங் அமைச்சரவையில் சேர்ந்தோமோ என்று எம்.ஜி.ஆர். கவலைப்பட்டார்.

அதனால்தான் எம்.ஜி.ஆருக்கும் இந்திராவிற்கும் மிகப்பெரிய இடைவெளி உருவாயிற்று. கிடைத்த இந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி.

போதாக்குறைக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதிமுகவை விட திமுக நம்பிக்கைக்குரிய கட்சி அதிமுகவும் அதன் தலைவர் எம்.ஜி.ஆரும் நம்புவதற்கே முடியாதவர்கள்.

வெறும் புன்னகை மட்டும் பதிலாக வந்தது எம்.ஜி.ஆரிடமிருந்து. அதன்பிறகு ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். 24 இடங்களில் அதிமுக போட்டியிடும். எஞ்சிய இடங்களில் கூட்டணிக்கட்சிகளுக்கு. அறிவித்துவிட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பினார் எம்.ஜி.ஆர். எதிர் முகாமில் திமுக 16 இடங்களில் போட்டியிட்டது.

எஞ்சியுள்ள 23 இடங்களிலும், பாண்டிச்சேரியிலும் காங். போட்டியிட்டது. கருணாநிதியின் புதுமை கோஷமான “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!!” என்பதை முன்வைத்தார் கருணாநிதி. எல்லாம் நேரம் என்று சிரித்துக்கொண்ட எம்.ஜி.ஆர். ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் எந்த செல்வாக்கு இல்லையென்றாலும் சந்தர்ப்பவசத்தால் அதனுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். அதற்கேற்றபடி தேர்தல் முடிவுகள் வந்தன. திமுக கூட்டணி 37 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. தேசிய அளவில் இந்திராகாந்தி வெற்றிபெற்று ஜனதா கட்சியை தோற்கடித்து மீண்டும் பிரதமராக அமர்ந்தார்.

அந்த வெற்றியில் தனக்கும் பங்கிருப்பது கருணாநிதியை உற்சாகமாக வைத்திருந்தது. இந்த தோல்விக்கான காரணிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டினார். ஒவ்வொருவரிடமும் பேசினார் எம்.ஜி.ஆர். பல விஷயங்கள் பட்டியலிடப்பட்டன. மதுவிலக்கை அமல்படுத்துவதில் காட்டிய கெடுபிடி, விவசாயிகள் போராட்டத்தை கையாண்டவிதம், அரசு ஊழியர்கள், என்ஜிஓக்கள் போராட்டம், விலைவாசி உயர்வு, மக்கள் பிரதிநிதிகள்-அதிகாரிகள் இடையேயான பனிப்போர். எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்.

சரி செய்ய வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மின்னல் வேகத்தில் சில காரியங்கள் நடைபெற்றன. பிற்படுத்தப்பட்டோர் சலுகைகள் பெற ஆண்டு வருமானம் ஆணை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இடஒதுக்கீடு 31லிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மது அருந்த 40 வயதிலிருந்து 30 வயதாயிற்று. அதற்கான மருத்துவ சான்றிதழ் தேவையில்லை.

தனியார் விடுதிகள் அல்லது ஓட்டல்களில் மது அருந்தினால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று அறிவிக்கப்பட்டது. அதற்குள் அதிமுகவிலிருந்து சிலர் வெளியேற முடிவு செய்தனர். தோல்வியும் அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் வெளியேறுவது கட்சிக்குத்தான் நல்லது என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.

– ஹரிகிருஷ்ணன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.